யாழ்ப்பாணமும் சமாதிக்கோவில்களும்

யாழ்ப்பாணத்தை நாம் சித்தர் பூமி என்று தான் சொல்லவேண்டும். நாம் அறிந்த வரையில் கடையிற் சுவாமிகள் முதல் எண்ணற்ற சித்தர்களை இப்பூமி தன்னகத்தே கொண்டுள்ளது. சித்தர்கள் இப்படித்தான் இருப்பார்கள் இப்படித்தான் அவர்கள் தோற்றம் என்று கணக்கிடமுடியாது. ஈழத்துச் சித்தர்களை விரல் விட்டு எண்ணமுடியாது. நாம் அறிந்த சித்தர்கள் ஒரு சிலரே. அவர்களை விட ஏராளமான சித்தர்கள் நம் நாட்டில் வாழ்ந்திருக்கிறார்கள். வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள்.

ஆலயவழிபாடுகள் எவ்வளவு நமது வாழ்வை நெறிப்படுத்துமோ அதைவிட சித்தர் சமாதிக் கோயில்கள் சக்தி வாய்ந்தவையாகும். இதனையே திருமூலர் திருமந்திரத்தில் ஏழாம் தந்திரத்தில் சமாதிக்கிரியை என்ற தலைப்பில் சமாதிக்கிரியை முறை பற்றிய நிறைய விடயங்களை குறிப்பிடுகின்றார்.

“எண்ணிலா ஞானி யுடல் என்ற திருமந்திர பாடல் மூலம் ஞானியின் உடல் இறைவன் கோயிலுக்கு ஒப்பாதலாக கொள்ளப்படுவதாக கூறுகின்றார்.

சித்தர்கள் சமாதி மட்டுமல்லாது அவர்கள் வாழ்ந்த இடங்களும் புண்ணிய இடங்களாக விளங்குகின்றன. உதாரணமாக நல்லூர்த் தேரடியை வணங்காதவர்களே இருக்கமாட்டார்கள். யோகர் சுவாமிகள், செல்லப்பா சுவாமிகள் உலாவிய இடங்கள் மட்டுமல்ல. அவர்கள் தியானம் செய்த இடங்களாகும்.
மேலும் சந்நிதி முருகன் ஆலயம் , கீரிமலை , வல்லிபுரம் போன்றன சித்தர்கள் ஞானிகள் அதிகம் உலாவித் திரிந்த இடங்களாகும். மேலும் இவ்விடங்களில் ஏராளமான சமாதிக் கோயில்களும் உண்டு.

சமாதிக் கோயில்கள் பற்றியும், அது அமைப்பது பற்றியும் திருமூலர் பின்வருமாறு குறிப்பிடுகின்றார்.
அதாவது ”நவமிகு சாணாலே என்ற திருமந்திரப் பாடல் மூலம் குகையை (நில அறையை) ஒன்பது சாண் ஆழமும் ஒரு பக்கத்திற்கு ஐந்து சாண் சதுரமும் ஆகச் செய்து அடியில் திருமேனி தவநிலையில் அமர்கின்ற ஆசனம் பக்கத்திற்கு மூன்றாக முக்கோணமாக அமைத்து, அதன் மேல் திருமேனியைப் பதுமாசனமாக இருத்துதல் வேண்டும்.

மேலும், எங்கெங்கு சமாதிக்கோயில்கள் அமைக்கலாம் என்பதை “தன்மனை சாலை என்று தொடங்கும் திருமந்திரப் பாடல் மூலம் பின்வருமாறு கூறியுள்ளார். அதாவது குளக்கரை , ஆற்றிடைப்பகுதி , மலர்ச்சோலை , கானகம் மற்றும் உயர் மலைச்சாரல் போன்ற இடங்களில் சமாதி ( குகை ) அமைக்கலாம் என்று கூறுகின்றார்.

மேலும் “நற்குகை என்று தொடங்கும் பாடல் மூலம் நில அறையின் மேலே அழகிய கோயில் ஐந்து அடிக்கு ஐந்து அடிச் சதுரமாய், உயரம் ஒன்பதடியாக மும்மூன்று அடி உயரத்தில் ஒவ்வொரு நிலையாய் மூன்று நிலைகள் தோன்றும்படி அமைத்தல் முறையாகும் என்றும் கூறுகின்றார்.

மேலும் “பஞ்சலோ கங்கள் நவமணி என்ற பாடல் மூலம் நில அறையின் அடியில் ஐம்பொன்களும், ஒன்பான் மணிகளும் நிரம்ப இட்டு மூடி, அதன்மேல் மேற்கூறிய முக்கோண பீடத்தை அமைத்து, அதன்மேல் தருப்பையைப் பரப்பி. திருவெண்ணீற்றைத் திருமேனிக்கு அடியிலும், சுற்றிலும், மேலேயும் நிரம்ப இட்டு, அதன்மேல் பொன்னிறமாய் உள்ள நறுமணப் பொடியை மிகுதியாகத் தூவுதலும் சிறப்புடையதாகும் என்ற கருத்தையும் கூறுகின்றார்.

தொடர்ந்து, “நள்குகைநால் வட்டம் என்ற பாடல் மூலம் எப்படி சமாதி வைக்கப்படல் வேண்டும் என்று கூறுகின்றார். இதன் பொருளாக, நடுவில் நில அறை இருக்க, நாற்புறத்திலும் மேலே வரம்பு அமைத்தபின், அதற்கு மேற்கு பக்கத்தில் நிலத்தின்மேல் ஆசனத் தின்மேல் திருமேனியை எழுந்தருளப் பண்ணி, சந்தனத்தின் கருப்பூரம் முதலியவை கலந்த குழம்பு, தனியாக இழைத்த சந்தனம். புனுகு, பனிநீர் முதலியவைகளால் திருமுழுக்குச் செய்வித்து, தேன் துளிக்க மலரும் பூவால் ஆகிய மாலையைச் சார்த்தி, தூப தீபம் காட்டுதல் வேண்டும்.

இறுதியாக, “ஓதிடு வெண்ணீற்றால் என்று தொடங்கும் பாடல் மூலம் தூப தீபம் காட்டுதல் முதலியவற்றைச் செய்தபின் திருநீற்றைத் திருமேனிமேல் குப்பாயம் போல மிகுதியாகப் பூசி, நில அறையில் அமைத்துள்ள பீடத்தின் மேல் மலர்கள், நறுமணப்பொடி திருநீறு இவைகளை இட்டு, மேலே திருமேனியை எடுத்து இருத்திச் சுற்றிலும் ஆடையைச் சூழ வைத்திடல் வேண்டும் என்று கூறுகின்றார்.

யாழ்ப்பாணத்தில் சமாதிக்கோயில்கள் பல இருக்கின்றன. அதில் முதலாவதாக கடையிற் சுவாமிகள் சமாதி கோயில். இது யாழ்ப்பாணம் வண்ணார்பண்ணை நீராவியடியில் அமைந்துள்ளது. இது ஒரு சிவாலயமும் கூட, வாலாம்பிகா சமேத வைத்தீஸ்வர சுவாமி தேவஸ்தானமாகும். கடையிற் சுவாமிகளின் சமாதியின் மேல் எழுப்பப்பட்ட சிவலிங்கம் மூலவராக காணப்படுகின்றார்.

நாம் அறிந்த வரையில் கடையிற் சுவாமிகளே ஈழத்துச்சித்தர் பரம்பரையை தோற்றுவித்த சித்தர் ஆவார். ஆதிகடைநாதன் எனவும் அழைக்கப்படுகின்றார். அவருக்கும் முதலும் நிறைய சித்தர்கள் இப்பூமியில் வாழ்ந்திருக்கலாம். அவரைப் பின்பற்றி எழுந்த சீடர் பரம்பரை ஏராளம் உண்டு எனலாம். குழந்தைவேற் சுவாமிகள் வழியே வந்த ஒரு பரம்பரை கீரிமலையில் அமைந்தது. அங்கு குழந்தைவேற் சுவாமிகளின் சமாதி ஆலயமும் , அவரது சீடரான அருளம்பலம் சுவாமிகளின் சமாதி ஆலயமும் அங்குண்டு. மேலும் அவரது சீடர்களினதும் , அன்பர்களினதும் அஸ்தி பீடங்களும் அங்கு நிறைவே உண்டு. அருளம்பலம் சுமாமிகளின் பெண் சீடரான தங்கம்மை அம்மையாரின் சமாதி ஆலயமும் சடையம்மா அம்மையாரின் சமாதி ஆலயத்திற்கு அருகில் உயர் பாதுகாப்பு வலயத்தில் உள்ளதாக கூறப்படுகின்றது.

ஈழத்து பெண் சித்தரான சடையம்மா அம்மையாரின் சமாதியும் , சங்கரர்சுப்பையரின் சமாதி ஆலயமும் உயர் பாதுகாப்பு வலயத்தில் உள்ளது.

கீரிமலையில் ஏராளமான வீர சைவர்களின் சமாதிக் கோயில்கள் காணப்படுகின்றன. வீர சைவர்களுக்கு சமாதி வைக்கும் மரபு உண்டு எனலாம். அவ்வாறு வீர சைவரான ஐயம்பிள்ளைக் குருக்களின் சமாதி ஆலயம் கீரிமலை ரேணுகா ஆச்சிரமத்தில் உண்டு.

கடையிற் சுவாமிகளின் மற்றொரு சீடர் பரம்பரையாக மண்டைதீவைச் சேர்ந்த நண்ணியர் சுவாமிகளும் , சின்னையா சுவாமிகளும் ஆவார்கள். சின்னையா சுவாமிகளின் சமாதி அன்னசத்திரமடத்தில் உள்ளது. நண்ணியரது சமாதி மண்டைதீவு சிவன் கோயிலின் பிள்ளையார் சந்நிதிக்கு கீழே உள்ளதாகக் கூறப்படுகின்றது. மேலும் இச் சிவன் கோயிலின் மூலவரின் கீழும் சமாதி உண்டு. ஆசிரியை ஒருவர் தன் கணவனின் சமாதி வைத்து கட்டிய சிவன் ஆலயமாகும். மேலும் கடையிற் சுவாமிகளுடன் தொடர்புடைய முத்தர்மகனின் சமாதி ஆலயம் முகப்பு வயல் முருகன் ஆலயத்திற்கு அருகில் உள்ள தோட்ட வெளியில் உள்ளது.

கடையிற் சுவாமிகளின் மற்றொரு சீடர் பரம்பரையைக் கொண்டமைந்தது தான் வேதாந்த மடம். கடையிற் சுவாமிகளால் ஆட்கொள்ளப்பட்ட சார்ஜன் சுவாமிகளின் சமாதி கோம்பயன் மயானத்திலும் அவரது சீடரான கனகரத்தினம் சுவாமிகள் மற்றும் அவரது சீடரான மகாதேவ சுவாமிகளின் சமாதி வேதாந்த மடத்தில் உள்ளது.

கடையிற் சுவாமிகளின் சீடர் பரம்பரையால் உருவாக்கப்பட்ட மற்றொரு மடம் தான் உசன் மடம். ஏழாலை சாது சங்க மடத்துடன் தொடர்புடையது. சடைவரத சுவாமிகளின் சமாதி ஏழாலை மயானத்தில் உள்ளதாக கூறப்படுகின்றது. ஏழாலை கண்ணகி அம்மன் கோயிலின் அருகில் அக்கோயில் பூசகரின் சமாதி உள்ளது.


உசன் மடத்தில் பொன்னம்மாள் அம்மையார் , மங்கையற்கரசியம்மையார் மற்றும் சிந்தாமணியம்மையாரின் சமாதி ஆலயங்கள் உண்டு. மேலும் நாகலிங்கப் பரதேசியாரின் நினைவுக்கல் உண்டு. அங்கு அவரது சமாதி உள்ளதா என்று உறுதிப்படுத்த முடியாமல் உள்ளது.

கடையிற் சுவாமிகள் காலத்திற்கு முன்னர் வாழ்ந்த ஞானிகளாக வண்ணார் பண்ணை சாந்தையர் மட வைரவர் கோயிலின் அருகில் சாந்தையர் எனப்படும் ஞானியின் சமாதி உண்டு. மற்றும் அராலி ஞானியார் கோயிலில் கந்த ஞானியார் எனப்படும் ஞானியின் சமாதியும் உண்டு.

இவை தவிர வேறு சில சமாதி ஆலயங்கள் கீழே

  • நயினாதீவு முத்துக்குமாரசுவாமிகளின் சமாதி ஆலயம் நயினாதீவில் உள்ளது. ( சோமஸ்கந்த ஈஸ்வரம்)
  • கோண்டாவில் – குடைச்சுவாமிகள் சமாதி ஆலயம் கோண்டாவில் அற்புத நர்த்தனப் பிள்ளையார் கோயிலில் உள்ளது. மேலும் பார்வதி
  • காரைநகர் – பேப்பர் சுவாமிகள் சமாதி ஆலயம் உள்ளது. மேலும் ஆலடி முருகனை அண்டியும் சமாதிகள் உள்ளதாக கூறப்படுகின்றது.
  • குப்பிளான் சிவகாமியம்மன் கோயிலில் சரவணைச்சுவாமிகளின் சமாதி ஆலயம் உள்ளது. அதற்கு அருகில் அவரது பெண் சீடர்களான அருட்பெருஞ்சோதியம்மா , மாணிக்கம்மா இருவரது சமாதி ஆலயங்களும் உள்ளன.
  • மறவன்புலவில் சின்னத்தம்பி சுவாமிகள் , கடவுள் சுவாமிகளின் சமாதி ஆலயங்கள் உள்ளன.
  • மிருசுவில் – சிதம்பரநாதன் சுவாமிகள் சமாதி மற்றும் சின்னையா சுவாமிகள் சமாதி
  • மெளனகுரு சுவாமிகள் – பாலாவி கொடிகாமம்
  • காசிப்பிள்ளை சுவாமிகள் – ஒட்டுவெளி முருகன் கோயிலுக்கு பின்னுக்கு அமைந்துள்ளது.
  • தையிட்டி தம்பிப்பிள்ளை சுவாமிகள் – தூதுகுடை கண்ணகி அம்மன் கோயில் அருகில் உள்ளது.
  • மருதனார்மடம் – இராமநாதன் சமாதி ஆலயம்
  • பன்னாலை – முத்து ரிஷியின் சமாதி ஆலயம் உள்ளதாகக் கூறப்படுகின்றது.
  • மாதகல் – வன்னியர் கோயிலில் மெளனகுரு சித்தருடைய சமாதி உள்ளதாகவும் , மாதகல் சம்பில் துறையில் நரசிங்க சித்தருடைய சமாதியும் உள்ளதாக கூறப்படுகின்றது.
  • தெல்லிப்பளை – சுதுமலை செல்லப்பரின் சமாதி ஆலயம் உள்ளது. மேலும் கணேசையருடைய சமாதி ஆலயம் வறுத்தலைவிளானில் உள்ளதாக கூறப்படுகின்றது.
  • திருநெல்வேலி கேணியடி வைரவர் ஆலயத்தில் கூழங்கைத்தம்பிரான் சுவாமிகளின் சமாதியும் திருநெல்வேலி ஞான வைரவர் ஆலயத்தில் பொன்னம்பலம் சுவாமிகள் சமாதியும் உள்ளது.
  • கோப்பாய் – பழக்கடைச்சாமியார் சமாதி
  • வேலணை- கறுவல் ஐயா சமாதி மற்றும் அவரது மனைவியின் சமாதி காணப்படுவதோடு அப்துல் காதிர் எனும் முஸ்லீம் ஞானியின் சமாதி வேலணைப் பள்ளி வாசலில் காணப்படுகின்றது.
  • வரணி ( மாசேரி ) – ஸ்ரீலஸ்ரீ குருநாதய்யா சமாதி
  • அளவெட்டி – சிவசத்தர் சுவாமிகளின் சமாதி அளவெட்டி திருவடி நிழல் மடாலயம் உள்ளதாக கூறப்படுகின்றது.
    அளவெட்டி கிருஷ்ணர் கோயிலில் விநாசித்தம்பி மற்றும் அவர் மனைவியின் சமாதி உண்டு. மற்றும் அளவெட்டி முத்துமாரியம்மன் கோயிலிலும் கோயில் பூசாரியின் சமாதி உண்டு.
  • வண்ணார்பண்ணை – பொன்னப்பா சுவாமிகளின் சமாதி உண்டு.
  • கைதடி – செல்லம்மா மாதாஜியின் சமாதி ஆலயம் உண்டு. மேலும் கைதடி குருநாதர் கோயிலிலும் சமாதி உள்ளதாக கூறப்படுகின்றது.
  • சாவகச்சேரி- திருப்புகழ் சுவாமிகளின் சமாதி உள்ளதாக கூறப்படுகின்றது.
  • புங்குடுதீவு – சதானந்த சுவாமிகள் , சாதுச்சுவாமிகள் , கணபதிப்பிள்ளை ஐயா மற்றும் மருதப்பு சுவாமிகளின் சமாதி ஆலயங்கள் உண்டு.
  • செம்மணி – கதிரவேலு சுவாமிகளின் சமாதி உள்ளதாகக் கூறப்படுகின்றது. சிலர் செல்லப்பா சுவாமிகளின் அன்பர் ஒருவரின் சமாதி என்று கூறுகின்றனர்.
  • வதிரி – சுவாமி பரமானந்தருடைய சமாதி உள்ளதாக கூறப்படுகின்றது.
  • நல்லூர் – நல்லை ஆதின ஸ்ரீலஸ்ரீ சுவாமிநாத ஞானசம்பந்த தேசிக பரமாச்சாரிய சுவாமிகளின் சமாதி உள்ளது.
  • வல்லிபுரக்கோயில் அருகில் – மூச்சப்புலவு சுவாமிகள் சமாதி
  • பொன்னாலை – பெரியவர் சமாதி
  • இணுவில் – இணுவிலின் முதற் சித்தரான பெரிய சந்நியாசியாரின் சமாதி ஒரு முருகன் கோயிலில் அமைந்துள்ளது. இணுவில் உலகப்பெருமஞ்சம் உருவாகக் காரணமான சந்நியாசியாரின் சமாதிக்கு மேல் அவர் வழிபட்ட வேலைக் கொண்டு முருகன் கோயில் அமைக்கப்பட்டுள்ளது. அதுவே இணுவில் மஞ்சத்தடிமுருகன் ஆகும்.

காரைக்கால் சிவன் கோயிலை சுற்றி ஏராளமான சமாதி ஆலயங்கள் உண்டு. முக்கியமாக அம்பலவாண சுவாமிகளின் சமாதிச் சிவாலயம் அமைந்துள்ளது.
அவர் ஒரு சித்தவைத்தியரும் கூட. அவருக்கு அருகில் அவரது குருவும் வைத்தியருமான நடராசாப்பரியாரியார் மற்றும் அவர் மனைவியின் சமாதிக் கோயில்கள் உண்டு. மேலும் சச்சிதானந்த சுவாமிகளின் சமாதிக்கோயிலும் காரைக்கால் மயானத்தை அண்மித்து உள்ளது. ராஜரத்தினம் சுவாமிகள் சமாதியும் உண்டு. மேலும் காரைக்கால் மயானத்தில் தியாகராஜா சுவாமிகள் , மலர் அம்மா , கோண்டாவில் அம்பலவாண சுவாமிகள் , சின் நாச்சி அம்மையார், தியாகராஜா சுவாமிகளின் தாய் தந்தை தமையனாரின் சமாதிகள் , மாரிமுத்து சுவாமிகள் , பெரிய சந்நியாசி சுவாமியின் தமையனார் போன்றோரின் சமாதிகள் உண்டு.

சன்னிதி முருகன் ஆலயமும் ஒரு சமாதிக் கோயிலாகவே உள்ளது. பூவரசு மரத்தின் கீழ் புண்ணியனார் ( ஐராவசு என்ற கந்தர்வன் ) என்பவரின் சமாதியுடன் இணைந்த கோயில் எனக் கூறப்படுகின்றது. கரம்பாவாளி மயானத்தில் நிறைய சித்தர்களின் சமாதிகள் காணப்படுகின்றன. நிறைய சமாதி கோயில்கள் சேதமாக்கப்பட்டும் விட்டன.

சந்நிதி முருகன் கோயில் பூவரச மரத்தடி

மேலும் மருதடிப் பிள்ளையார் , கோப்பாய் கிருஷ்ணர் , நுணசை முருகன் , நல்லூர் முருகன் , மீசாலை பன்றிக்கேணி , பருத்தித்துறை சிவன் , கோட்டுவாசல் அம்மன் , சந்நிதி முருகன் கோயில் போன்றனவும் சமாதிகளைக் கொண்ட ஆலயங்களாக கருதப்படுகின்றது.

சித்தர்களின் உடலைக் கொண்டு சமாதி ஆலயம் தான் செய்ய வேண்டும் செய்யாது தகனம் செய்தல் கூடாது என்று திருமந்திரத்தில் பின்வருமாறு கூறப்பட்டுள்ளது. “அந்தமில் ஞானி எனும் பாடல் அக்கருத்தை கூறுகின்றது. ஆனாலும் யாழ்ப்பாணத்தில் சமாதி ஆலயங்கள் இல்லாமல் சித்தர்களை தகனம் செய்து அதன் அஸ்தியைக் கொண்டு அமைக்கப்பட்ட ஆலயங்கள் பல உண்டு.

கடையிற் சுவாமிகளின் மற்றொரு சீடர் பரம்பரையான செல்லப்பா சுவாமிகள் தன் உடலை எரித்து சேதுவில் கரைத்து விடும்படியே கூறியுள்ளார். மேலும்
அஸ்தியைக் கொண்டு சமாதி பீடங்கள் உருவாக்கப்பட்டன . அதில் முக்கியமாக யோகர்சுவாமிகளின் உடலை தகனமிட்டு அதன் அஸ்தியைக் கொண்டு இரண்டு ஆலயங்கள் உருவாக்கப்பட்டுள்ளது. கொழும்புத்துறையில் தான் யோகர் சுவாமிகள் அதிகம் வாழ்ந்தார். அவர் வாழ்ந்த இடத்தில் சமாதிக் கோயில் உருவாக்கப்பட்டது.

இங்கு லிங்கம் எதுவும் பிரதிஷ்டை செய்யப்படவில்லை. திருவடி அஸ்தி மேல் பிரதிஷ்டை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. இதே போல புங்குடுதீவிலும் சர்வோதயத்தில் சுவாமியின் சிறிய அளவு அஸ்தியைக் கொண்டு பீடம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.

மேலும் கைதடி மார்க்கண்டு சுவாமிகள் , வேதாந்தமடம் இராமலிங்க சுவாமிகள் , நரியண்குண்டு பத்ரகாளியம்மையார் , கொழும்புத்துறை இராமச்சந்திர மகரிஷி , மறவன்புலவு திருவாசகம் சுவாமிகள் , தெல்லிப்பழை துர்க்கை தங்கம்மா அப்பாக்குட்டி , சுன்னாகம் பழனி முருகன் பழனிச்சாமி , நல்லை ஆதின ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் போன்றோரின் அஸ்தி பீடம் உள்ளது குறிப்பிடத்தக்கது.

இணுவில் ஞானலிங்கேஸ்வரர் கோயிலுக்கு முன் இணுவில் சித்தரான சிவஞானர் பெரியண்ணாவின் அஸ்தி வைக்கப்பட்டு
லிங்கம் பிரதிஷ்டை செய்யப்பட்டது.

இன்னும் ஏராளமான சமாதிப் பீடங்கள் இனங்காணப்படாமல் உள்ளது. அவற்றை இனங்கண்டு நம்முன்னோர்களின் ஆசிகளுடன் பழைமையும் பாதுகாக்க வேண்டும்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *