
ஈழத்து சித்தர்கள் என்றாலே பல சுவாமிகள்தான் எங்கள் நினைவுக்கு வருவார்கள். ஆனால் ஈழத்து சித்தர் மரபிலே சுவாமினிகளும் இருந்திருக்கிறார்கள். அப்படிப்பட்ட ஈழத்து முதாலாவது பெண் சித்தராக அடையாளப்படுத்தப்படுபவர் அன்புக்கும் வழிபாட்டுக்குமுரிய சடையம்மா அவர்கள். ஆன்மீக வழி அன்பர்களுக்கு அவர் பெண்சித்தராக இருந்தாலும் அனைத்து பெண்களுக்கும் ஒரு முன்னோடியான ஆளுமைமிக்க தமிழ் பெண்ணாக வாழ்ந்தவர் என்பது சடையம்மாவினுடைய ஆராயப்படவேண்டிய இன்னொரு பக்கமாக இருக்கிறது.
1865.08.19 ( ஆவணி ரோகினி) நன்னாளில் வீரகத்திப்பிள்ளை சின்னாச்சிப்பிள்ளை தம்பதிகளுக்கு மகளாக திருநெல்வேலி கிழக்கில் அவதரித்தார். முத்துப்பிள்ளை எனும் பிள்ளைத்திருநாமம் சூட்டி மகிழ்ந்த பெற்றோர் குழந்தைக்கு 11 வயதாகும்போது கதிரேசனார் என்பவரை திருமணம் செய்து வைத்தனர். ஒருமுறை கணவன் நோய்வாய்ப்படவே நல்லூர்கந்தப்பெருமான் கனவில் தோன்றி அம்மையாரை வழிப்படுத்தவே, முருகன் கட்டளைப்படி வைரவப்பெருமான் சந்நிதிக்கு கணவனை அழைத்துவந்து 40 நாட்கள் அங்கு தங்கியிருந்து முருகனை வழிபட்டு இருக்கிறார். ஒருமுறை இவர் கடையிற்சுவாமிகளை சந்திக்க புறப்பட்ட வேளை அவரே நேரில் வந்து” கந்தனை மறவாது வந்தனை செய் அவரே நம் சொந்தம்” என்று ஆசிகூறி சென்றபின்னர் கணவனும் குணமாகியிருக்கிறார். அதன் பின்னரும் இவர் நல்லூர்கந்தனிற்கு தொடர்ந்து பணிகள் புரிந்து வந்திருக்கிறார்.

இரண்டு பெண்குழந்தைகளுக்குத்தாயாகி இல்லறத்தில் இருந்துகொண்டே தன்னைத்தன்னால் அறிந்துகொண்ட அம்மையார் இல்லறவாழ்வு நீங்கி கணவனிடம் விடைபெற்று துறவறவாழ்க்கைக்குத்தலைப்பட்டார். அவ்வாறாக அவர் துறவற வாழ்வை ஆரம்பித்த இடம் தற்போது நல்லூர் தேர்முட்டியின் முன்னால் அறுபத்துமூன்று நாயன்மார் குருபூசை மடம் என்று அழைக்கப்படும் இடமாகும். அது முன்னர் சடையம்மா மடம் என்றே அழைக்கப்பட்டது. அம்மையார் தான் வாழ்ந்த காலத்தில் 63 நாயன்மார்களின் குருபூசைகளையும் தவாறாது பூஜித்து அன்னதான பணிகளையும் செய்துவந்தார் என்பது குறிப்படத்தக்கது.
ஈழத்து ஆன்மீக சாதனையாளர்களை பொறுத்த வகையில் கதிர்காமம் என்பது தவிர்க்கமுடியாத ஒன்றாக இருக்கிறது. யோகர் சுவாமிக்கும் செல்லப்பா சுவாமிகள் அடிக்கடி கதிர்காமம் போ என்று பணித்ததுமட்டுமல்லாது ஈழத்து சித்தர்கள் எல்லோரும் ஏதோ ஒருவகையில் கதிர்மத்தோடு சம்பந்தப்படுகிறார்கள். அதற்கு காரணம் போகர் சித்தர் கொடுத்த சக்திமிக்க இயந்திரதகடு ஆன்மீக சாதனையாளர்களுக்கு குண்டலினி சக்தியை சகஸ்ரத்திற்கு கொண்டுபோவதற்கான இயைபான சூழலை உருவாக்குவதாக இருக்கலாம். சடையம்மா அவர்களும் அடிக்கடி கதிர்காமம் யாத்திரை செய்தது மட்டுமல்லாமல் கதிர்காமத்திலும் சடையம்மா மடம் ஒன்றையும் நிறுவியிருந்தார்.

குண்டலினி சக்தியை பற்றிகதைக்கும்போதுதான் அதற்கு ஆதாரமான வாலை வழிபாடு ஞாபகம் வருகிறது. சித்தர்கள் அனைவருமே பெரும்பாலும் முருகன் வழிபாடு (குண்டலியாம் சிவ குகன் தினம்வருக) மற்றும் வாலை வழிபாட்டுடன் சம்பந்தம் பெறுகிறார்கள். (முக்கோண வட்ட கிணற்றுக்குள்ளே மூல மண்டல வாசிப்பழக்கத்திலே அக்கோண வட்டச் சக்கரத் திக்வாலை அமர்ந்திருக்கிறாள் வாலைப்பெண்ணே என்று கொங்கண சித்தர் குறிப்பிடுகிறார்.)
அந்தவகையில் திருநெல்வேலியில் தற்போது புதிதாக குடமுழுக்கு நடந்த வாலை அம்மன் கோயிலுக்கும் சடையம்மாவுக்கும் நெருங்கிய தொடர்புள்ளது. அங்கு அவர் தியானநிலையில் இருந்து வாலையம்மனின் அருட்பார்வை கிட்டியது. இன்று அக்கோயிலின் யாகசாலையின் மேற்புரம் சடையம்மாவின் திருவுருவத்தை எழுந்தருளச்செய்துள்ளார்கள்.
அநேக ரிசிகள் முனிவர்களுக்கு யோகநிலையில் குண்டலினி சக்தியை உச்சிக்கு கொண்டுவருவதால் அவர்களுக்கு அபரிமிதமான தலைமுடி வளர்ச்சி இருக்குமாம். அந்த வகையில் முத்துப்பிள்ளையும் யோகநிலை கைகூடவே அவரது சடாமுடியும் நீண்டுவளர்ந்து நிலத்தை தழுவியது. அதன் காரணத்தாலேயே சடையம்மா என்ற காரணப்பெயரும் அவருக்கு வந்தது. சடையம்மா யோகநிஷ்டையில் அவர் சக்தியை உச்சந்தலைக்கு கொண்டுவரும்போது அவர் தலைவீங்குவதையும் பின்னர் சாதாரணநிலை திரும்பும்போது வீக்கம் குறைவதையும் பக்தர்கள் அவதானித்து பதிவுசெய்திருக்கிறார்கள்.
சடையம்மா ஈழத்தில் மட்டுமல்லாது திருசெந்தூரிலும் மடம் அமைத்து பல்வேறு சமய சமூகப்பணிகளை ஆற்றியிருக்கிறார் என்பது அவரது ஆளுமையைக்காட்டுகிறது. தற்போது அந்த திருசெந்தூர் மடம் மட்டுமே அவரது பெயரில் இன்றுவரை இயங்கி பெண்களின் வாழ்வாதரத்தை உயர்த்தும் பணிகளை செய்துவருகிறது.
சடையம்மா தன்னுடைய இறுதிகாலத்தில் மாருதப்புரவள்ளிக்கு வரமருளிய ஈசனின் இடத்தில் (கீரிமலையில் மாருதப்புரவள்ளி தவம்செய்த குன்றிற்கு அருகில்) ஒருமடம் அமைத்து மக்களுக்கான தன் பணிகளைச்செய்து தனக்கான ஆன்மீக சாதனைகளையும் செய்து ஆடி அனுசம் நன்னாளில் 05.08.1936 சமாதியடைந்தார். யோகர்சுவாமி தலைமையில் அம்மையாருக்கு சமாதி வைக்கப்பட்து.
யாழ்பாணம் நல்லூரில், கதிர்காமத்தில், திருச்செந்தூரில், கீரி மலையில் என்று மடங்களை அமைத்து தனியொரு பெண்ணாக ஈழத்து மக்களுக்கு பல பணிகளையாற்றிய சடையம்மா ஆண் பெண் என்ற எந்த பேதமும் இன்றி அனைவருக்கும் ஆத்மலாபம் கிட்டும் என்பதற்கு ஒரு நல்ல உதாரணம்.
“கந்தனை மறவாது வந்தனை செய் அவரே நம் செந்தம்” என்று கடையிற்சுவாமிகள் சடையம்மாக்கு அருளிய உபதேசம் எங்கள் எல்லோருக்குமானது. செல்லப்பர்,யோகர் சடையம்மாவுக்கு மட்டுமல்ல நல்லூரான் எங்கள் எல்லோருக்கும் சொந்தமாவான். சடையம்மாவை எமக்களித்த நல்லூர் கந்தனை வந்தனைசெய்வோம்.
நன்றி
